Friday, March 9, 2007

<>சிறுகதை<>




பெண்....!


பரபரப்பான விடிகாலைப் பொழுதில் நிம்மதியான உறக்கம் கலைக்க மனமில்லாமல் வீடுகளுக்குள் நத்தையாய்சுருண்டிருந்தனர். அதட்டல், அழுகுரல், தட்டுமுட்டுச் சாமான்களின் உருளும் சத்தம் என கீழ்வீட்டின் கலவரம்அதிகரிக்க மாடியிலிருந்த 26 வயதுப் பெண் சாந்தியை இறங்கிவரச் செய்தது.
அங்கே...
போலீஸ்காரர்கள் வீட்டு உரிமையாளரின் பொருட்களை தெருவில் வீசி எறிந்து கொண்டிருந்தனர். காக்கிச் சட்டை ஒன்று கையிலிருந்த லத்தியால் வீட்டுக்காரி பிந்துவை நினைத்த இடத்தில் குத்தி ஆக்ரோசமாக ஏதோ கேட்டுக் கொண்டிருக்க,இன்னொரு காக்கிச் சட்டை, "தள்ளீட்டு வாங்க ஸ்டேசன்ல வச்சு கச்சேரி பண்ணிக்கலாம்..." என்று சொல்ல....தரதரவென பிந்துவை இழுத்துச் சென்று வெளியே நின்றிருந்த போலீஸ் வேனில் தள்ளினர்.
" அவங்க வெளியூர் போயிருக்கிறாருங்க... அவரு வந்ததும் ஸ்டேசனுக்கு வர்றேன். புள்ளங்களை கவனிக்க யாருமில்லைங்க.." என்று சொல்லி பிந்து தேம்பித் தேம்பி அழுகிறாள். பிந்துவின் குழந்தைகள் இரண்டும் வேனுக்கு வெளியே நின்று கதறி அழுதுகொண்டிருக்க...


"வீட்டில் ஆண்கள் இல்லாதபோது எதுக்காக இப்படி கூட்டீட்டுப்போறீங்க? " சாந்திதான் கேட்டாள்.
"ம்... கயாலா ஸ்டேசனுக்கு வா... வெளக்கம்...வெவரம்... சொல்றேன்..." - காக்கிச் சட்டையின் பொறுப்பான பதிலுக்கு முன்பே, வேன் சீறிப் பாய்ந்து புறப்பட்டுப் போனது.

சிதறிக் கிடந்த சாமான்களை எடுத்துக்கொண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வீட்டுக்குள் போனாள், சாந்தி. அவசர அவசரமாக ஜன்னல்களில் தெரிந்த முகங்கள் மின்னலாய் மறைந்தது.
தீங்கு, வீட்டில் நடந்தாலும், வீதியில் நடந்தாலும் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ளும் பேர்வழி அல்ல சாந்தி. கண்ணால் கண்டுவிட்டால் சிலிர்த்தெழுகிற பொதுநலவாதியாக சாந்தி இருந்தாள். அதற்காக எங்கோ நடக்கிற அவலங்களுக்கெல்லாம் ஆர்பாட்டமாக கொடி பிடித்து கோஷம் போடும் சமூக சேவை எல்லாம் செய்வதில்லை.
ஒரு முறை கன்னாட் பிளேசில் பஸ் ஏறிவரும்போது தனக்கு முன் நின்றிருந்த பெண்ணின் கைப்பையை பிளேடு போட்டுக் கொண்டிருந்தவனை சட்டென்று கையை எட்டிக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். மற்றவர்கள் பார்த்தும் பார்க்காதது போல இருந்தாலும் சாந்தியால் அப்படி இருக்க முடியாத மனங்கொண்டவள்.
பஸ்ஸைக் காவல் நிலையத்தில் நிறுத்தச் சொல்லி தான் கையும் களவுமாகப் பிடித்தவனை ஒப்படைத்துவிட்டுத்தான் வந்தாள்.

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், சாந்தி. அலுவலக்த்தில் இவள் செய்த வேலைகளை தாமே செய்ததாகச் சொல்லி எம்.டியிடம் பேர் வாங்கிக் கொண்டிருந்தான், சக ஊழியன் ஆறுமுகம். சில நந்தி வேலிகளைத் தாண்டித்தான் எம்.டியைப் பார்க்கவேண்டும். பொறுமையாக இருந்தாள். ஆனாலும் அவ்வப் போது சிறுசிறு குறைகளை பெரிதாக்கி மேனஜரிடம் வத்தி வைப்பது, ஜி.எம்மிடம் சிண்டு முடிவது என்று சில்லறை வேலைகளைச் செய்து ஒவ்வொருவரிடமும் ஒரு முகம் காட்டி வந்தான், ஆறுமுகம்.
ஒரு நாள், " என்னைக் கவனிச்சுக்க... இல்ல இங்க காலம் தள்ள முடியாது," என்று சொல்லிச் சாந்தியின் கன்னத்தில் செல்லத் தட்டு ஒன்று தட்டினான். அவ்வளவுதான், சாந்தி காளியாக மாறிவிட்டாள். அலுவலகம் என்று கூடப் பார்க்காமல் செருப்பைக் கழற்றி பளார் பளாரென அறைந்து விட்டாள்.

அப்போதே கால் கடுதாசி எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டாள். வீட்டில் அவளுக்கு ஆறுதல் சொல்லாவிட்டாலும் அனலைக் கக்கினார்கள். வருமானம் போன கவலைதான் அவர்களுக்குப் பெரிதாகத் தெரிந்தது. பெற்றவர்களும் சரியில்லை. உடன் பிறந்தவர்களும் சரியில்லை. மனவலியோடு சென்னையில் இருக்கப் பிடிக்காமல் தலை நகர் தில்லியிலுள்ள தன் தோழி மூலம் ஒரு வேலையை வாங்கிக் கொண்டு வந்துவிட்டாள். தில்லி வந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டது. கயாலாவில் வி.வி.காலனியில் லால் அப்பார்ட்மெண்டின் இரண்டாவது மாடிக்கு குடி வந்தும் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது.
இன்று விடிந்தபோதுதான்.... மேற்சொன்ன சமாச்சாரங்கள் அரங்கேறியிருந்தது.
கயாலாவின் ஒதுக்குப் புறத்தில் அழுக்குப் படிந்திருந்த காவல் நிலையத்தில் சாந்தி நுழைந்தாள். பாராவில் இருந்த காவலரிடம், தாம் இன்ஸ்பெக்டரைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னாள். உள் பக்கம் கையைக் காட்டி போகச் சொல்லவே, தடுப்பு தடுப்பாக தடுக்கப்பட்டிருந்த அறைகளில் ஒன்றில், ஆர்.எஸ்.யாதவ், இன்ஸ்பெக்டர், லா & ஆடர் என்றிருந்த மேஜை முன் போய் சாந்தி நின்றாள்.
வில்லன் சிரிப்புச் சிரித்துக் கொண்டு தொலைபேசியில் முரட்டுக் குரலில் பேசிக்கொண்டே சாந்தியை கண்களால் அளந்து கொண்டிருந்தான், யாதவ். பேசி முடித்தானதும் புருவத்தை மட்டும் உயர்த்தி என்ன? என்ற பார்வையால் கேள்வியை எறிந்த யாதவ்விடம், காலையில் நடந்த சம்பவத்தைச் சொல்லி, பெண் என்றுகூடப் பாராமல் லத்தியால் அடித்து வேனில் ஏற்றி வந்தது மிகுந்த அநாகரீகம். அப்படி என்ன தவறு செய்தார் என்று கதறக் கதற அடித்து இழுத்து வந்தது எதற்காகன்ணு தெரிஞ்சு கூட்டீட்டுப் போக வந்துள்ளேன் என்ற விபரத்தைச் சொன்னாள் சாந்தி.
" நீ யார்? " - இன்ஸ்பெக்டரின் கேள்விக்குப் பதில் சொன்னாள்.

" உன்னிடம் பேச எனக்கு நேரம் இல்லை... போ... போ... வந்துட்ட பெரிசா நியாயம் கேக்க..." கடமை உணர்வோடு சட்டம் ஒழுங்கு பேசியது.

" ஸார்... பிந்துவ எதுக்கு இங்க கொண்டு வந்து இருக்கீங்க? விபரம் சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி அவங்களெ கூட்டீட்டுப் போகலாம்ணு தான் வந்திருக்கேன்.." சாந்தி சாந்தமாகச் சொன்னாள்.

" மரியாதையா சொன்னா போக மாட்ட... ஐ.ஜி. மாதிரியில்ல வெறப்பா நின்னு கேக்குற... நா யாருன்னு நீ தெரிஞ்சுக்க வேணாம்..." காக்கிச் சட்டைக்குள் இருந்த கர்வம் வெளிப்பட்டது.

" போலீஸ் தப்பா நடந்துகிட்டாங்கன்ணு, மேலதிகாரி ஒங்க கிட்ட சொன்னா நியாயம்கிடைக்கும்ணு வந்தேன். இங்க கிடைக்காது போல இருக்கு..." என்று தன் ஏமாற்றத்தை தெரிவித்தாள் சாந்தி.

" நீயும் அழகா சினிமா ஸ்டார் மாதிரிதான் இருக்கே... ஒங்கிட்ட நான் தப்புப் பண்ணலாம்ணு பாக்குறேன்..."

" ஸார்... நீங்க வரம்பு மீறிப் பேசுறீங்க... அப்பறம் இதையும் நான் உங்க மேலதிகாரி கவனத்துக்கு கொண்டு போக வேண்டீருக்கும்..." சற்று உஷ்ணம் கொட்டினாள்.

" என்னடி ஒரேதா பேசிக்கிட்டே போற... இன்னைக்கு ஒங் கொழுப்பை அடக்குறேன்.
ஏய்... யார் அங்க... டூ நாட் ஸிக்ஸ்... இங்க வா... இந்தத் தே...டியாளுக்கு நேரம் சரியில்லை... இவளை என்னோட ஸ்பெஷல் ரூம்ல வை...நாங்கி கர் டி சாலி கே...( இவ ஒடம்புல ஒரு துணி இல்லாம எடுத்துரு ) மிச்சத்தை நா பாத்துக்கிறேன்.
இன்ஸ்பெக்டர் உடையிலிருந்த காட்டு மிராண்டியின் கூக்குரல் காக்கிச் சட்டைகளைக் கொண்டு வந்து நிறுத்தியது.அடுத்த சில நிமிடங்களில் அந்த அவலம் தவிற்க இயலாமல் அரங்கேறிப் போனது. சட்டத்தின் காவலர்கள், வெறி நாய்களாக மாறி, சாந்தியைக் கடித்துக் குதறிப் போட்டனர்.

காவல் நிலையம் கற்பழிப்பு நிலையமாகவும், வேலியே பயிரை மேய்ந்த கொடுமையும் நடந்தேறிட..... எதுவுமே நடவாதது போல உரத்த மெளனத்தில் அந்தக் கட்டிடம் உறைந்துபோயிருந்தது. இது போன்ற செயல்கள் அடிக்கடி அங்கு நிகழ்ந்து அதற்கும் பழக்கமாகி இருக்கவேண்டும்.

முழங்கால்களுகு இடையில் தன் தலையை கவிழ்த்துக் கொண்டு, இரண்டு கைகளையும் போர்வையாக்கி, பிறந்த மேனியாக இருக்கும் உடம்பை மறைத்துக் கொண்டு சாந்தி குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.
கறை படிந்த காக்கிகள் அகன்றதும், பிந்து ஓடி வந்து, " பாவிங்க இந்தச் சின்னப் பூவை கசக்கி நாசமாக்கீட்டீங்களே, உருப்புடுவீங்களா? " என்றவாறு தான் போட்டிருந்த பல்லுவை ( துப்பாட்டாவை ) சாந்தியைச் சுற்றிப் போர்த்திவிட்டாள்.

" பிளாட்பாரக் கடையில் திருடிய சென்னைப் பெண் கைது " - மறுநாள் பத்திரிக்கையில் சிறு செய்தி வெளியாகி இருந்தது.

- ஆல்பர்ட் ·பெர்னாண்டோ,
அமெரிக்கா